அறநிலையத்துறை அதிகாரிகளை உள்ளே விட மாட்டோம் என கோவில் முன் திரண்ட மக்களால் பரபரப்பு
நெகமம்; நெகமம் வீரமாச்சியம்மன் கோவில் முன்பு மக்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெகமம் வீரமச்சியம்மன் கோவில் 150 ஆண்டுகள் பழமையானது. கோவில் இடத்தில், 4 கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள 300கும் மேற்பட்ட குடும்பங்களின் குலதெய்வமாகவும் இந்த கோவில் உள்ளது. மேலும், இந்த கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர். இந்த கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த மாரிமுத்து என்பவருக்கும், கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதை தொடர்ந்து மாரிமுத்து தரப்பில், கோவில் கணக்குகளில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மேலும், கோவில் கணக்குகளை தர்கார் அமைத்து சரி பார்க்க வேண்டும் என, சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து கோவில் குழுவினர் சென்னை ஹை கோர்ட்டில் தடை உத்தரவு பெற விண்ணப்பித்தனர். இந்நிலையில், இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் வீரமாச்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள், கோவிலுக்குள் அதிகாரிகளை நுழைய விட மாட்டோம் என, வழிமறித்து காத்திருந்ததால், அதிகாரிகள் கோவிலுக்கு வரவில்லை. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் சென்றனர்.
மக்கள் கூறியதாவது : மூன்று தலைமுறைகளாக இந்த கோவிலுக்கு வந்து செல்கிறோம். பலருக்கு இது குலதெய்வமாக உள்ளது. இந்நிலையில், தனிநபர் தொடர்ந்து வழக்கு காரணமாக பிரச்னை பெரிதாகி உள்ளது. இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து வழக்கு தொடர்ந்த போதிலும், அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர். இத்தனை காலங்களாக அறநிலையத்துறை உதவிகள் இன்றி கோவிலை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். தற்போது வந்து, அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது வருத்தம் அளிக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்குள் விடுவதற்கு எங்களுக்கு எண்ணம் இல்லை என்றனர்.