அனுமன் ஜெயந்தி: 100008 வடை மாலை சாற்றி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் இன்று(19ம் தேதி) தங்க கவசம், ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகத்தின் நாமக்கல் நகரின் மையத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டைக்கு மேற்கே, 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன பிரம்மாண்ட ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் சிலை 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கருதப்படுகிறது. இவர் இடுப்பில் வாளுடனும், சாளக்கிராம மாலையுடனும் காட்சியளிக்கிறார். கூரையோ, கோபுரமோ இன்றி வெட்டவெளியில் நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் இவருக்கு, இந்த ஆண்டு டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழானை முன்னிட்டு இன்று காலை அதிகாலை 5 மணிக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. இந்த மாலை மதியம் வரை ஆஞ்சநேயர் கழுத்தை அலங்கரிக்கும். மதியம் 1 மணி அளவில் வடை மாலை இறக்கப்பட்ட பின் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். சுவாமிக்குச் சாற்றப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும். இந்த ஒரு லட்சம் வடை மாலை தயாரிப்பு முழுக்க முழுக்க பக்தர்களின் உபயம் மூலம் நடைபெறுகிறது. சாதாரண நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்காக 2,000 வடைகள் கொண்ட மாலைகள் சாற்றப்படுகின்றன. பழமையும் புதுமையும் வாய்ந்த இந்தத் தலம், ஆன்மீக மறுமலர்ச்சியின் அடையாளமாக விளங்குவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாகவும் திகழ்கிறது.ஜெயந்தி அன்று அனுமனை தரிசிக்கவும் பிரசாதமாக வடை பெற்றுக்கொள்ளவும் இப்போது முதலே பக்தர்கள் தயராகிவருகின்றனர்.
இராமாயண காலத்தில், சஞ்சீவி மலையை எடுத்துச் சென்ற ஆஞ்சநேயர், திரும்புகையில் ஒரு பெரிய சாளக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்து வந்தார். வழியில் சூரியன் உதயமானதால், சந்தியாவந்தனம் செய்யக் கருதி அந்தச் சாளக்கிராமத்தைக் கீழே வைத்தார். ஆனால், பூசை முடிந்து திரும்பியபோது அதைத் தூக்க முடியவில்லை. அப்போது, இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை முடித்துவிட்டுப் பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என ஒரு வான் ஒலி கேட்டது. அதன்படி, இராமனுக்கு துணையாக போர் முடித்து மீண்டும் ஆஞ்சநேயர் வந்தபோது, அந்தச் சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நின்றது. அது கண்டு வியந்து வணங்கிய ஆஞ்சநேயர் அந்த தளத்திலேயே நரசிம்மரை வணங்கியவாறு நின்றுவிட்டார் நின்ற அதே கோலத்திலேயே ஆஞ்சநேயர் இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.