மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை துவக்கம்
தொண்டாமுத்தூர்; கோவையில், மஹா சிவராத்திரி விழாவிற்கு, மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஆதியோகி ரத யாத்திரையை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை ஈஷா மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் மற்றும் தென் கைலாய பக்தி பேரவை இணைந்து ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரையை, ஈஷா யோகா மையம், தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழகத்தின் பாரம்பரிய ஆதினங்கள் நடத்துகின்றன. இம்முறை, 250க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரதம் பயணிக்க உள்ளது. இந்த ரதங்கள், மஹா சிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30 ஆயிரம் கி.மீ., பயணிக்கவுள்ளது. இந்த ரத யாத்திரையின் துவக்க விழா கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள ஆதியோகி முன்பு நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஆதியோகி ரதங்களை துவக்கி வைத்தனர்.
இவ்விழாவில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பேசுகையில்,"வெள்ளியங்கிரி மலை, தென் கயிலை என போற்றப்படுகிறது. கைலாயம் செல்வது உடலாலும், பொருளாலும் கடினமான காலத்தில், எளிய முறையில் கைலாய நாதனை தரிசிக்க வழி காட்டுவது இந்த தென் கையிலை மலை. அந்த மலையின் அடிவாரத்தில் யோக முகத்துடன் ஆதியோகி எழுந்தருளியிருப்பது பேரருளாகும். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தலங்கள் தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அதுபோலவே, இன்றைக்கு இந்த ஆதியோகி ரதங்கள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி மக்களை ஆன்மிக செந்நெறிக்கு அழைக்கின்றன. ஆற்று நீர் கடலை நோக்கி செல்லும் போது, மீன்கள் எதிர்நீச்சல் போட்டு மேலே வருவது போல, இங்கிருந்து புறப்படும் இந்த ரதங்கள், மக்களை மஹா சிவராத்திரி பெருவிழாவை நோக்கி, ஈஷா யோக மையத்துக்கு அழைத்து வரக்கூடிய உன்னத பணியை செய்கின்றன. திருஞானசம்பந்தர் காலத்தில் நடந்த நெறியை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் ஆன்மிக இயக்கமாக இந்த ரத யாத்திரை விளங்குகிறது,"என்றார்.