ஞானபுரீ மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
மயிலாடுதுறை; ஞானபுரீ சங்கடஹர ஸ்ரீ மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். .
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இங்கு 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும். இக்கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை ஆஞ்சநேய சுவாமிக்கு வெள்ளிக்கவசம், சிகப்பு பட்டு வஸ்திரம் சாற்றி, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹா சுவாமிகள் முன்னிலையில் லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர் மட்டும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு விசேஷ அர்ச்சனைகள் நடந்தது. கோலாகலமாக நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் சன்னதியில் மகா ஸ்வாமிகள் பக்தர்களுக்கு ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்த ஒரு ரூபாய் நாணயத்தை பிரசாதமாக கொடுத்து, அருளாசி வழங்கினார்.