தனுஷ்கோடியில் பிரதமர் மோடி ; கடற்கரையில் தியானம்.. டில்லி கிளம்பினார்
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தி சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டார். அதற்கு முன், அரிச்சல்முனை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை(ஜன.,22) நடக்க உள்ளது. இதற்காக, விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் உள்ள புனித தலங்களில் தரிசனம் செய்து வருகிறார்.
நேற்று(ஜன.,20) காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். மதியம் ராமேஸ்வரம் வந்த மோடி 22 தீர்த்தங்களில் நீராடிய பின், ராமநாத சுவாமி கோயிலில் வழிபட்டார். இரவு அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார்.
தனுஷ்கோடியில்; இன்று காலை 9:00 மணிக்கு மடத்தில் இருந்து காரில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றார். அங்கு கூடையில் இருந்த பூக்களை கடலில் தூவி வணங்கினார். தொடர்ந்து கடற்கரையில் நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்தார். அரிச்சல்முனையில் உள்ள தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோதண்டராமர் கோயிலில்; பிறகு தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோயிலில், ராமர், சீதை மற்றும் ஹனுமனை வழிபட்ட பிரதமர் மோடி சிறப்பு பூஜையும் செய்தார். அங்கு பட்டர்கள் மந்திரங்கள் முழங்கிட மோடிக்கு ஆசி வழங்கினர்.
டில்லி கிளம்பினார்; சாமி தரிசனம் செய்த பிறகு , ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டில்லிக்கு கிளம்பி சென்றார்.