இன்று தைப்பூசம்; முருகனை வணங்குவோம்! நலம் பல பெறுவோம்!
பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. தைப்பூசம் சிவசக்தி, முருகனுக்குரிய சிறப்பான நாள். பழநி முதலாக முருகன் திருத்தலங்கள் தைப்பூசம் வெகுவிசேஷம். தைப்பூசத்தன்று நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும். இன்று முருகனை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த நாள் நல்ல நாள்; கடக ராசியைச் சேர்ந்தது பூச நட்சத்திரம். இதன் அதிபதி சந்திரன். தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் இருப்பார். இந்த நாளில் சூரியனும், சந்திரனும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வர். தை பவுர்ணமியன்று, பூச நட்சத்திரத்தின் போது இப்பார்வைக்கு ஆற்றல் அதிகம். சிவபெருமானின் அம்சம் சூரியன்; அம்பிகையின் அம்சம் சந்திரன். இந்த நல்ல நாளில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
செவ்வாய் தோஷம் தீர... செவ்வாய்க்குரிய தலமான பழநியில் உள்ள முருகன் சன்னதி மேற்கு நோக்கி உள்ளதால் அதற்கு சக்தி அதிகம். இங்கு 42 துாண்கள் கொண்ட பாரவேல் மண்டபம் உள்ளது. சுக்கிரனின் எண் 6. இதைக் குறிக்கும் வகையில் துாண்களின் கூட்டுத்தொகை 4+2 = 6. பாரவேல் மண்டபத்தில் சுக்கிர ேஹாரை அல்லது வெள்ளிக்கிழமையில் வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும். செல்வம் சேரும். செவ்வாய் தோஷம் விலகி திருமணம் கைகூடும்.
விடியல் எப்போது;
*அதிகாலையில் கூவும் சேவல் போல, எப்போது எனக்கு விடியல் பிறக்கும் என வேண்டுவது சேவல் காவடி.
* குழந்தைக்கு தாய்ப்பால் உணவு. முதுமைக்கு பசுவின் பால் உணவு. இறக்கும் முன் உயிர் துடிக்கும் போதும் பால் ஊற்றுவர். மறைந்த பின் இரண்டாம் நாளன்றும் பாலுாற்றுவர். பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் துணையிரு... முருகா! என வணங்குவதே பால்காவடி.
* துன்பங்களால் ஏற்பட்ட வேதனையை தணியச் செய்வது பன்னீர், சந்தனக்காவடிகள்.
* மனைவி, குழந்தைகள், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாக என்னுடன் உள்ளனர். அவர்களை கரை சேர்ப்பாய் முருகா... என வேண்டுவது புஷ்பக்காவடி.
* கடலில் உள்ள மீன் போலவும், கருடனைக் கண்ட பாம்பு போலவும் தவிக்கிறேன். இதில் இருந்து மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்பது மச்ச, சர்ப்பக் காவடிகள்.
கந்தன் என்றால் பகைவரை பலம் இழக்கச் செய்பவர். பகைவர் என்பது நம் மனமே. தேவையில்லாததை மனம் சிந்திக்கிறது. அதை தடுத்து காப்பவர் கந்தன். கந்து என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி. உயிர்கள் என்னும் யானையை ஆசையில் இருந்து காப்பவன் கந்தன். கந்து என்ற சொல்லுக்கு பற்றுக்கோடு என பொருள் உண்டு. கந்தனை பற்றினால் பிணி தீரும்.
உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18ஐ முதல் எழுத்தாகக் கொண்ட 30 பாடல்கள் சண்முக கவசத்தில் உள்ளன. இதை தினமும் ஆறுமுறை பாடினால் பிரச்னை தீரும்.