உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் பணம் திருட்டு; உள்ளேயே தூங்கியதால் பிடிபட்டார்.. பாதுகாப்பு கேள்விக்குறி

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் பணம் திருட்டு; உள்ளேயே தூங்கியதால் பிடிபட்டார்.. பாதுகாப்பு கேள்விக்குறி

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் நேற்று  இரவு மறைந்திருந்து உண்டியலில் பணம் திருடியவர் கோயிலுக்குள்ளே தூங்கினார். இன்று அதிகாலை அவரை கோயில் பணியாளர்கள் பிடித்தனர். கோயிலில் இன்று அதிகாலை வழக்கம்போல் பரிஜாதகர் சுவாமிநாதன் பரிவார தெய்வங்களுக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தார். சண்முகர் சன்னதியிலுள்ள பரிவார தெய்வங்களுக்கு அவர் அபிஷேகம் செய்யச் சென்றபோது, அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்புறம் ஒருவர் படுத்திருந்தார். அவரது அருகில் பையில் பணம் இருந்தது. அவரை எழுப்பிய போது, அந்த மர்ம நபர் பணப் பையுடன் ஓடினார். சுவாமிநாதன் சத்தம் போடவே மர்ம நபரை கோயில் பணியாளர்கள் பிடித்தனர். பணியாளர்கள் கோயில் துணை கமிஷனர் சுரேஷிக்கு தகவல் தெரிவித்தனர். மர்ம நபர் திருப்பரங்குன்றம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், அவர் திருநகர் நெல்லையப்பபுரம் மணி 45, என்பதும் மைக் செட் ஆபரேட்டராக வேலை பார்ப்பவர் என்பதும் தெரிந்தது. நேற்று இரவு கோயிலுக்கு வந்த மணி சண்முகர் சன்னதியில் தூணுக்கு பின் மறைந்திருந்து இரவில் சண்முகர் சன்னதியில் உள்ள உண்டியலில் இருந்து ரூ. 18,500ஐ திருடியதும், குடும்ப கஷ்டத்திற்காக திருடியதும் தெரிந்தது. மணியை போலீசார் கைது செய்து, கோயில் உண்டியல் திருடிய பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். கோயில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பொழுது, நேற்று இரவு 8 40 மணிக்கு மர்ம நபர் சண்முகர் சன்னதியில் இருந்தது தெரிந்து.

கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: கோயில் உள்துறை நிர்வாகத்தை கவனிக்க இரண்டு கண்காணிப்பாளர்கள், இரண்டு பேஷ்கார்கள், ஒரு மணியம், ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். கோயிலுக்குள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க உதவி பாதுகாப்பு அலுவலரும் உள்ளார். இரவு 9:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அந்த சமயம் பணியாளர்கள் கோயில் மண்டபங்களில் பார்வையிடுவது வழக்கம். நேற்று இரவு பணியாளர்கள் அனைத்து மண்டபங்களையும் ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர். இவ்வளவு பணியாளர்கள் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு அந்த நபர் இரவு கோவிலுக்குள் ஒளிந்துள்ளார். கோயில் உண்டியல்களில் அலாரம் எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டுள்ளது. கோயில் நடை சாத்திய பின்பு யாராவது உண்டியல்களை தொட்டால் சத்தம் ஒலிக்கும்‌. அப்படி இருந்தும் அந்த நபர் உண்டியலில் உள்ள பணத்தை திருடியுள்ளார். அலாரம் சத்தம் கேட்கவில்லையா அல்லது எச்சரிக்கை மணி வேலை செய்யவில்லையா என்பது தெரியவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களை சிறப்பு கட்டண தரிசனத்திற்கு அனுப்பி அதன் மூலம் கோயில் வருமானத்தை பெருக்குவதற்கு ஆர்வம் காட்டும் உள்துறை நிர்வாகம், பக்தர்களின் வசதியை கண்டு கொள்வதில்லை. தற்போது பாதுகாப்பிலும் கோட்டை விட்டுள்ளனர்.

துணை கமிஷனர் விசாரணை: நடந்த திருட்டு சம்பவம் குறித்து பணியாளர்களிடம் துணை கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தினர்‌‌. அறங்காவலர் குழுவினரும் கமிஷனரிடம் சம்பவம் குறித்து நேரில் கேட்டறிந்தனர். கோயில் உண்டியல் பணம் திருட்டு குறித்து உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !