திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்ட திருமாங்கல்யம் விற்பனை
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் மூலவர் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்ட திருமாங்கல்யம் விற்பனை செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் திரு.பூமண கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்ற அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் இதுவரை 2 கிராம், 5 கிராம், 10 கிராம் எடைகளில் தங்க திருமாங்கல்யத்தை விற்பனை செய்து வருகின்றனர். இனி 5 கிராம், 10 கிராம் எடையில் 4 வகைகளில் திருமணத்திற்கான தங்க (திருமாங்கல்யம் ) தாலிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திருமாங்கல்யம் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்படும் திருமாங்கல்யம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. ஏற்கனவே திருமணமானவர்கள் மற்றும் மணமக்கள் இந்த தாலியை அணிவதன் மூலம் நீண்ட ஆயுளை பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர், விற்பனை செய்யப்பட இருக்கும் திருமாங்கல்யத்தை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.