உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு பிறப்பு: உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்.. கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

தமிழ் புத்தாண்டு பிறப்பு: உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்.. கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

சென்னை ; தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள கோவில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பல கோவில்களில் பஞ்சாங்கம் வாசித்து பலன்கள் கூறப்பட்டன.

ஸ்ரீசோபகிருது ஆண்டில் இருந்து குரோதி ஆண்டு பிறந்தது. தமிழ்ப் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பல வீடுகளில், சித்திரை கனி காணும் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருத்தணி முருகன் கோவில்: தமிழ் புத்தாண்டு விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

வடபழநி ஆண்டவர் கோவில்: அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து காலசந்தி பூஜையும், காலை 8:00 மணிக்கு பாலாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க நாணயக் கவசம் சாத்தப்பட்டது. பின் மூலவருக்கு ராஜ அலங்காரமும் நடந்தது.

பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில்: காலை 6:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வருட பஞ்சாங்கம் வாசித்தல், சிறப்பு வழிபாடு நடந்தது.

குன்றத்துார் முருகன் கோவில்: காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. முருகப்பெருமான் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல, மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவில் உட்பட பல கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !