உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது. நாளை பிரசித்தி பெற்ற திருமுலைப்பால் விழா நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப் பாடல் பெற்ற திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலைக்கோயிலான இங்கு குரு, லிங்க, சங்கமம் என்ற மூன்று திருமணிகளோடு இறைவன் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.  இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப லக்னத்தில் காலை 8:30 மணிக்கு கோவில் வசந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் ஓத, தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சட்டைநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர் மற்றும் வாசனை திரவியப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீப ஆராதனை காட்டினர். 9:45 மணிக்கு  சித்திரை பெருவிழா ரிஷப கொடி  ஏற்றப்பட்டு மகாதீபஆராதனை காண்பிக்கப்பட்டது . அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டு கொடியேற்றத்தை கண்டு தரிசனம் செய்தனர். சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான  உமையம்மை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளிக்கும் திருமுலைப்பால் விழா நாளை   தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை திருக்கோளக்காவிற்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளி பதிகம் பாடி பொற்றாலம் பெறும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பல்லக்கில் சீர்காழி மீண்டருளும் காட்சியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 18ம் தேதி சகோபரம், 19ஆம் தேதி திருக்கல்யாணம்,  21, 22 ஆம் தேதிகளில் திருத்தேர், 26 ஆம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் சூப்பிரண்டு  செந்தில்  தலைமையிலானோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !