திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவம் துவங்கியது. ஏப்.23 ல் தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரையில் பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். நேற்று முன்தினம் இரவு சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்ரீதேவி,பூதேவியுடன் பெருமாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிப்படம், சக்கரத்தாழ்வார் புறப்பாடு துவங்கியது. தேரோடும் வீதிகளில் கொடிப்படம் வலம் வந்தது. பின்னர் கொடிப்படத்திற்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 10:50 மணிக்கு பட்டாச்சார்யர்களால் கொடியேற்றம் நடந்தது. பின்னர் சுவாமிக்கும் , கொடிமரத்திற்க்கும் பூஜைகள், தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. தினசரி இரவு சிம்ம, அனுமார்,தங்க கருடசேவை, சேஷ, வெள்ளியானை,தங்க குதிரை,அன்னம் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஏப்.19ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், ஏப்.23 ல் தேரோட்டம், ஏப்.25 ல் புஷ்பப் பல்லக்கில் சுவாமி எழந்தருளலுடன் பிரமோத்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ,கண்காணி்பபாளர் அ.சேவற்கொடியோன் தலைமையில் செய்கின்றனர்.