உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம்!

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம்!

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. தமிழகத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் உலகப்புகழ் பெற்ற முருகத்தலமாக கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் திகழ்கிறது. மேலும் பிரசித்தி பெற்ற முருகத்தலமாகவும், வெட்டுவான் கோயில் எனப்படும் ஒற்றைக்கல் சிற்பரதக்கோயில், மலைக்குன்று மற்றும் சமணர்கால கற்சிற்பங்கள் ஆகியவற்றை கொண்ட சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது. இதில் கழுகசாலமூர்த்தி கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பவுர்ணமி கிரிவலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஏனெனில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலுக்கு மலைக்குன்றே விமானமாக உள்ளதால், கருவறையை சுற்றி வழிபட வேண்டுமெனில் மலைக்குன்றையே சுற்றி வரவேண்டும். மேலும் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் போல் மலையை சுற்றி கிரிவலம் வரவேண்டியுள்ளதால் கழுகுமலை பவுர்ணமி கிரிவலமும் பக்தர்களிடையே பிரசித்தி பெற்றுள்ளது. இம்மாத பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் மேற்கு வாசலில் ஒன்று கூடினர். தொடர்ந்து ஹரஹர சங்கரா, சிவசிவ சங்கரா, கழுகாசலமூர்த்திக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களுடன், மலையை சுற்றி கிரிவலம் வந்து, கோயில் தெற்கு வாசலில் முடித்தனர். கிரிவலத்தில் பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி உள்பட சங்கரன்கோவில், தென்காசி, கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !