உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; விரதம் துவங்கிய பக்தர்கள்

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; விரதம் துவங்கிய பக்தர்கள்

தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,15ல் துவங்குவதை முன்னிட்டு, இன்று மாசி 1ல் திருவிழாவிற்கு தீச்சட்டி எடுப்பதற்கு விரதம் மேற்கொண்ட ஆண், பெண் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கையில் கங்கனம் கட்டிக்கொண்டனர். 


தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ.,தொலைவில் மஞ்சளாற்றின் கரையில், ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் வரிசையில், மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூலஸ்தானமான குச்சு வீட்டின் கதவு திறக்கப்படுவதில்லை. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பல ஆண்டுகளாக அணையாத நெய்விளக்கு எரிகின்றது. இங்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடைபெறும் சாயரட்சை பூஜையில் சயன உத்தரவு கேட்பது கோயிலின் சிறப்பு அம்சம். தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. இங்கு நெய் பானையை எறும்புகள் நெருங்குவதில்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இங்குள்ள அம்மனை குல தெய்வமாக வணங்குகின்றனர். நாளை திருவிழா துவக்கம்: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜன. 25ல் முகூர்த்தாக்கால் நடப்பட்டது. நாளை பிப்.15 முதல் 22 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள்: தேவானப்பட்டி அரிசிக் கடைவீதி, பஸ்ஸ்டாப், கோயில் நுழைவு ஆர்ச், மூலஸ்தானம், சுற்றுப்பகுதி, மஞ்சளாற்றங்கரை, தற்காலிக பஸ்ஸ்டாண்ட் உட்பட 40 இடங்களில் கேமரா பொருத்தும் பணி துவங்கியது. இதனைகண்காணிக்க கோயில் வளாகத்தில் பெரிய டி.வி.,அமைக்கப்பட உள்ளது. தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்பார்வையில் கோயில் வளாகம் பகுதியில் 24 மணி நேரம்


மருத்துவ வசதி, தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி, தூய்மைப்பணி, தீயணைப்புத்துறை மேற்பார்வையில் தீயணைப்பு வாகனம், மஞ்சளாற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 6 கன அடி திறக்கப்படும் தண்ணீர், பக்தர்கள் வசதிக்காக தொடர்கிறது. மஞ்சளாற்றில் ஆண், பெண் உடை மாற்றுவதற்கு வெவ்வேறு பகுதிகளில் தற்காலிக அறைகள், பெரியகுளம், ஆண்டிபட்டி, வத்தலக்குண்டு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.24 மணி நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி., நல்லு, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சுழற்சி முறையில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். செயின் திருடர்களை பிடிக்க ஆண்,பெண் தலா 5 போலீசார் மப்டியில் வலம் வர உள்ளனர். பெண்கள் கவனத்திற்கு: தங்கத்தின் விலை அதிகரிப்பால், பெண்கள் தேவை என்றால் அளவோடு நகைகளை அணிந்து வரவும், கூட்ட நெரிசலில் அதனை அவர்களது பார்வையின் கண்காணிப்பில் பார்த்துக்கொள்ளவும், குழந்தைகள், சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !