உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் கிடப்பில் சுக்ரீவர் கோயில் கும்பாபிஷேகம்

ராமேஸ்வரம் கோயிலில் கிடப்பில் சுக்ரீவர் கோயில் கும்பாபிஷேகம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான சுக்ரீவர் கோயிலில் திருப்பணிகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடக்காமல் முடங்கி கிடக்கிறது.

ராமாயண வரலாற்றில் ஸ்ரீ ராமர் வானர சேனைகளின் தலைவர் சுக்ரீவருடன் இணைந்து வாலியை வதம் செய்த பின் சுக்ரீவர் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் எனுமிடத்தில் புனித நீராடி பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்ததாகவும், பின் ராவணனை வதம் செய்ய இந்த இடத்தில் ராமர், லெட்சுமணர், சுக்ரீவர், அனுமான் ஆகியோர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் இங்கு சுக்ரீவருக்கு தீர்த்த குளத்துடன் கோயில் உள்ளது. இக்கோயில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. பழமையான இக்கோயிலை 2021ல் ஹிந்து சமய அறநிலையத்துறை ரூ. 20 லட்சம் செலவில் திருப்பணிகளை துவக்கி இரு மாதம் முன்பு பணி முடிந்தது. பணிகள் முடிந்தும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் கும்பாபிஷேகம் நடத்தாமல் உள்ளனர்.

இதுகுறித்து தமிழக வி.ஹெச்.பி., தென் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறியதாவது: ராமாயண வரலாற்றில் தொடர்புடைய சுக்ரீவர் கோயில் திருப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது. தற்போதைய தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்றார். ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் கூறுகையில், சுக்ரீவர், காவல்கார சுவாமி கோயில்களுக்கு திருப்பணிகள் முடிந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதி முடிந்ததும் அரசு அனுமதியுடன் செப்., ல் இரு கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !