உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் நமச்சிவாயா கோஷத்துடன் வலம் வந்த திருப்பூர் விஸ்வேஸ்வரர் தேர்

ஓம் நமச்சிவாயா கோஷத்துடன் வலம் வந்த திருப்பூர் விஸ்வேஸ்வரர் தேர்

திருப்பூர்:ஓம் நமசிவாய... சிவாயநம ஓம் என்ற கோஷத்துடன், பக்தர்கள் வெள்ளத்தில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி தேர் பவனி வந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது. விநாயகர், சூலதேவர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவமூர்த்திகள், சோமாஸ்கந்தர் ஆகியோருக்கு, அதிகாலை சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள், நேற்று அதிகாலை ரதங்களில் வீற்றிருந்து அருள்பாலித்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், ரத்தின கிரீடம் தரித்து சிறப்பு அலங்காரத்துடன், தேரில் ஏறி அருள்பாலித்தனர். காலை முதல், பக்தர்கள் தேரில் வீற்றிருந்த சுவாமிகளை தரிசனம் செய்தனர். மாலை, 4:55 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது.கலக்கிய நிகழ்ச்சிகள்: அவிநாசி, வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, சுப்பிரமணியம் தலைமையிலான அறங்காவலர் குழுவினர், மேயர் தினேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர், சிதறு தேங்காய் உடைத்து, தேர்வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், சூலதேவர் அமர்ந்த சிறிய தேர் முன்செல்ல, ஸ்ரீவீஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர், சோமாஸ்கந்தருடன் பக்தர் வெள்ளத்தில் பவனி வந்தது. பவானி, கரூர், திருச்சி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கும்பகோணம், வெண்ணந்துார், ஆத்துார், தேனி உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் பங்கேற்றனர். திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம், அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், திருக்கயிலாய வாத்தியங்களை இசைத்து, ஆடியவாறும், சங்குநாதம் எழுப்பியபடியும் தேருக்கு முன்பாக சென்றனர். பெண்கள் கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் ஆடியபடி முன்னே சென்றனர். முன்னதாக, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் வேடமிட்ட சிறுவர்கள், பன்னிருதிருமுறை ஏடுகளை கையில் ஏந்தியபடி, பஞ்சவர்ணக்குடையுடன் ஊர்வலமாக நடந்து சென்றனர். கேரள சென்டை வாத்தியம், பேண்ட் வாத்தியம், சிவகன வாத்தியம், வானவேடிக்கையுடன், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.பக்தி பரவசம்...: கோவிலின் தெற்கு வாசல் அருகே வந்த போது, கோவிலில் சாயங்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. சிவாச்சாரியார்கள் வந்து, தேரின் மீதிருந்த சோமாஸ்கந்தருக்கு அமுது படைத்து, தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி, பூஜைகள் செய்தனர். அதன்பின், கிழக்கே நகர்ந்து சென்றது. முன்னதாக, ஈஸ்வரன் கோவில் வீதியில், கேபிள் தாழ்வாக சென்றதால், தேர் ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டது; கோவில் பணியாளர்கள் கேபிளை துண்டித்த பிறகு, தேர் நகர்ந்து சென்றது. பக்தர்கள், ஓம் நமசிவாய... சிவாய நம ஓம் கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிய தேர், மாலை, 4:45 மணிக்கும், பெரிய தேர் 4:52 மணிக்கும் வடம் பிடிக்கப்பட்டது; சரியாக, 7:26 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தேர் நிலையை அடையும் முன், வாணவேடிக்கையும்; திருமுறை பாராயணமும் நடைபெற்றது. மேற்கு ரதவீதியில் இருந்து, தேர் கிழக்கு நோக்கி திரும்பியதும், பூமார்க்கெட் பூ வியாபாரிகள், தேர்களின் மீது மலர்களை துாவி, பக்தி பரவசம் பொங்க வரவேற்றனர். தேர் ஒவ்வொரு வீதியாக சென்றதும், 50க்கும் அதிகமான துப்புரவு பணியாளர், உடனுக்குடன் வீதிகளை துாய்மைப்படுத்தி, குப்பைகளை அகற்றினர். தேர் நிலையை அடைந்ததும், பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை, 5:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !