உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் குருபூஜை; முத்துப்பல்லக்கு விழா

தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் குருபூஜை; முத்துப்பல்லக்கு விழா

தஞ்சாவூர், சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் இறைவனோடு ஐக்கியமானார். அவரது குருபூஜையை முன்னிட்டு, அவருக்கு முத்துப்பலக்கு விழா எடுத்து கொண்டாடப்படுவது வழக்கம்.இவ்விழா நூறாண்டுகளுக்கும் மேலாக  கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று (மே 25ம் தேதி) கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் காலை 8:00 மணிக்கு கணபதி ஹேமம், மதியம் 11:00 மணிக்கு திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து, பாலதண்டாயுதபாணி சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் எழுந்தருளியதும் இரவு 10:00 மணிக்கு கீழவாசலிலிருந்து வீதியுலாவாக புறப்பட்டு, தஞ்சாவூர் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி வழியாக மங்கள வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன் விடிய விடிய வீதியுலா நடைபெற்றது.இதே போல்,  கீழவாசல் வெள்ளை விநாயகர் கோவில், குறிச்சி தெரு சுப்பிரமணியர் கோவில், சின்ன அரிசிக்காரத் தெரு பழனியாண்டவர் கோவில், கல்யாணகணபதி கோவில், ஜோதி விநாயகர் கோவில், தெற்கு வீதி கமலரத்ன விநாயகர் கோவில், மேலவீதி சுப்பிரமணியர் கோவில், வடக்குவாசல் பாலதண்டாயுதபாணி கோவில், காமராஜ் மார்கெட் செல்வ விநாயகர் கோவிலில்களிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், திருஞானசம்பந்தருடன் முத்துப்பல்லக்கில் ராஜ வீதிகளில் வீதியுலா வந்தனர். தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பக்தர்கள் கலந்துக் கொண்டு விடிய விடிய தரிசனம் செய்தனர். பிறகு இன்று (26ம் தேதி) கோவில்களுக்கு சுவாமி சென்று சிறப்பு அபிஷேக,ஆராதனை செய்து விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !