கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
நாகர்கோவில்: விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் மேற்கொள்ள கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். வெள்ளை வேட்டியில் பிரதமர் கோயிலுக்குள் சென்றார்.
லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 1ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் இன்று( மே 30) நிறைவு பெற்றது.இந்நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். பின்னர் சாலை மார்க்கமாக அரசு விருந்தினர் இல்லம் சென்று அங்கு ஓய்வு எடுத்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பிரதமர் மோடி, பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இன்று மாலை கடற்கரை சென்று, படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் மேற்கொள்கிறார். 1ம் தேதி பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள உள்ளார்.
கட்சி நிர்வாகிகளுக்கு தடை
கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பா.ஜ.,வினருக்கு பா.ஜ., மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை, அரசியல் கட்சி நிகழ்வாக மாற்ற வேண்டாம் எனக்கூறியுள்ளது. இதனிடையே, விருந்தினர் மாளிகைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவருக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனையடுத்து அவர் திரும்பிச் சென்றுவிட்டார்.