2,500 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் முருகமலை பரமசிவன்; வன விலங்குகளும் வணங்கும் அதிசயம்!
தேனி; தேவதானப்பட்டியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக முருகமலை உள்ளது. 2,500 அடி உயர முருகமலை உச்சியில் பரமசிவன் பார்வதி தேவியுடன் அருளாட்சி செய்கிறார். பழமையான இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு – காட்ரோடு வழியாக கொடைக்கானல் மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் துாரம் சென்றதும் டம்டம் பாறை உள்ளது. இதன் எதிரே உள்ள மருகமலை உச்சியில் பரமசிவன் கோயில் மற்றும் எலிவால் அருவியை கண்குளிர காணலாம். கோயில் கீழே மஞ்சளாறு அணை கம்பீரமாக காட்சியளிக்கிறது. வலது புறம் கொடைக்கானல் மலை, மூலையாறு உள்ளிட்ட இயற்கையின் எழில்கொஞ்சும் அழகை கண்டு ரசிக்கலாம். நருமணப் பூங்காவாக திகழும் முருகமலை பரமசிவன் கோயில் அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தலமாக உள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான், நரி, செந்நாய், மலைப்பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் மயில் உள்ளிட்ட பறவை இனங்களின் வாழ்விடமாக முருகமலை உள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து மலையேறும் சிவனடியார்களை வன விலங்குகள் தொந்தரவு செய்வதில்லை.
சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் தங்களின் கண்களின் தென்பட்டவுடன் வனவிலங்குகள் ஆங்காங்கே புதர்களில் பதுங்கி விடும். தங்களை மறைத்துக் கொள்ளும் அதிசயம் முருகமலையில் நடந்தேறி வருவதாக சிவனடியார்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். கோயில் அருகிலேயே மேய்ச்சலில் ஈடுபடும் காட்டெருமைகள் பக்தர்கள் அருகில் கூட வந்தது கிடையாது. கோயில் இருக்குமிடத்தை நேர் கொண்டு பார்த்து தலையை அசைத்து வணங்கி காட்டுக்குள் சென்று விடும் அதிசயம் இங்கு நாளும் நடந்தேறி வருகிறது. கோயில் பராமரிப்பு மற்றும் விழாக்களை நடத்த கோயில் நிர்வாகக் கமிட்டியினர் உள்ளனர். மாதம் தோறும் பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. பசியோடு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் அட்சய பாத்திரமாக பரமசிவன் கோயில் பூஜாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவிடும் தாயுள்ளத்தோடு சேவையாற்றி வருகின்றனர். சிவராத்திரி, பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடக்கிறது. சிராத்திரியையொட்டி கொடைக்கானல், பண்ணைக்காடு, ஊத்து, பூலத்துார், தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தேவதானப்பட்டி, பெரியகுளம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகமலை வருகின்றனர். வேண்டிய வரம் தந்து திருமண தோஷம் நீக்கி பக்தர்களை காக்கும் காவல் தெய்வமாக பரவசிவன், பார்வதி தேவி முருகமலையில் வீற்றிருக்கின்றனர்.