கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடந்தது.கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 5ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பரசுராமர், மாரியம்மன், முத்துமாரியம்மன் சனிபகவானுக்கு முத்து அளித்து விரட்டுதல், காத்தவராயன், ஆரியமாலா பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 19ம் தேதி ஊரணி பொங்கல், 20ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா சுவாமி திருக்கல்யாணம், 23ம் தேதி கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தன. இன்று தேர்திருவிழாவையொட்டி மூலவர் மாரியம்மன் சுவாமிக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் சுவாமியை, தேரில் எழுந்தருள செய்தனர். பூஜைகள் முடிந்த பிறகு, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். கச்சிராயபாளையம் சாலை, சேலம் மெயின்ரோடு, கவரைத்தெரு வழியாக மீண்டும் கோவிலுக்கு இழுத்து செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.