உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு வழிபாடும் சிறப்பும்.. வீட்டிலும் செய்யலாம் பதினெட்டாம் பெருக்கு பூஜை..!

ஆடிப்பெருக்கு வழிபாடும் சிறப்பும்.. வீட்டிலும் செய்யலாம் பதினெட்டாம் பெருக்கு பூஜை..!

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர்  செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும்  ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப்  பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.


வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை: காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும்  என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு  போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின்  முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை,  நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர்  உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும்  தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில்  ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது  நம்பிக்கை.


காவேரிக்கு பெருமாள் தரும் சீர்வரிசை: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில்  உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம்,  வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிருந்து அம்மா மண்டபம்  படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு  சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


காவிரியில் ராமன்: ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், அறுபத்தாறு கோடி  தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்  என்று கூறினார். அதன்படி ராமச் சந்திரன் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !