பாரம்பரியம் மாறாத மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா; முறை மாமன்கள் மீது நீர் ஊற்றி கொண்டாட்டம்
மானாமதுரை; மானாமதுரையில் கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு 152 ஆண்டுகளாக பாரம்பரியம் மாறாமல் முறைப்பெண் முறை மாமன்கள் மீது உறவினர்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் 156ம் ஆண்டு பொங்கல் முளைப்பாரி உற்சவ ஆடித்திருவிழா கடந்த 9ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஏந்தி,அழகு குத்தி பூக்குழி இறங்கும் விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று முன் தினம் மாலை 300க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி ஓடுகளை தூக்கிக்கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து அலங்கார குளத்தில் கரைத்தனர். நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து கண்ணார் தெரு பகுதியில் தொடர்ந்து 152 ஆண்டுகளாக பாரம்பரியம் மாறாமல் முறை பெண்கள் மீது முறை மாமன்களும்,முறை மாமன்கள் மீது முறைப்பெண்களும் மாறி, மாறி மஞ்சள் தண்ணீரை ஊற்றியும், முகத்தில் மஞ்சள் பொடியை தடவியும் விழாவை கொண்டாடினர். இத்திருவிழாவிற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த உறவினர்கள் தங்களது முறை பெண்கள் மற்றும் முறை மாமன்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி சந்தோசமாக விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா அக்கசாலை, அன்னதான பிள்ளையார் அறக்கட்டளை, இளைஞர் பேரவை,அன்னதான குழுவினர் செய்திருந்தனர்.