உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்; வரும் 22ல் கும்பாபிஷேகம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் ஆரம்பம்; வரும் 22ல் கும்பாபிஷேகம்

இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம், கோ பூஜை அதனைத் தொடர்ந்து மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் பொங்கல் விழா நடைபெறும்.இந்த விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில வருடங்களாக பணிகள் நடைபெற்று வந்து முடிவுற்றதை தொடர்ந்து வருகிற ஆக. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயில் முன்பாக யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை கோயில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகின. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது பின்னர் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 3 நாள்கள் 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிற 22ம் தேதி காலை 8:00மணியிலிருந்து 9:15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்,விழா கமிட்டியினர், கோயில் பணியாளர்கள்,கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !