சங்கரநாராயண சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவம்
சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்று (23ம் தேதி) மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகள் கழித்து இன்று (23ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் விமானங்கள் மற்றும் கோபுரங்கள் புதிதாக வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கிறது. மேலும் கோயிலில் பராமரிப்பு பணிகளும் செய்யப்பட்டு இருக்கிறது.
சிறப்பு பூஜைகள்; கடந்த 16ம் தேதி மாலை எஜமானர் அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், தனபூஜை பிராமண அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, கிராம சாந்தி பூஜைகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. 17ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், மகாகணபதி ஹோமம், பரிவாரமூர்த்தி கலா கர்சனம், கோபூஜை, கஜபூஜை, த்ரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், பிரவேசபலி, அம்மச்சியார் சிறப்பு பூஜை, ரசேஷாக்ன ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. 18ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை, புண்ணியாகவாசனம், நவகிரக ஹோமம், திசாஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது. மாலை விக்னேஸ்வரபூஜை, புண்ணியாக வாசனம், சாஸ்தா சிறப்பு பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி நடந்தது. 19ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், சாந்திஹோமம், மூர்த்தி ஹோமம் நடந்தது. மதியம் பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மிருத்ஸங்க்ரஹணம் நடந்தது.
யாகசாலை பூஜை; 20ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை, புண்ணியாகவாசனம், அக்னி ஸங்கிரஹணம், தீர்த்த ஸங்கிரஹணம், பிரசன்னாபிஷேகம், பிரதான ஆச்சாரிய தசவித ஸ்நானம் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், அங்குரார்பணம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது. 21ம் தேதி காலை ஆச்சார்ய விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், இரண்டாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது. காலை மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. மாலை ஆச்சாரிய விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மூன்றாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், நான்காம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி நடந்தது. தொடர்ந்து, பரிவார யாகசாலையில் மகா பூர்ணாஹூதி, கலசங்கள் புறப்பாடு, பிரதான யாகசாலையில் மகா பூர்ணாஹூதி, உபசாரங்கள் நடந்தது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை ஆச்சரிய விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், ஐந்தாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பிம்பசுத்தி, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, பூர்ணாஹூதி நடந்தது.
கும்பாபிஷேகம் ; இன்று (23ம் தேதி) காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், ஆறாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி நடைபெற்றது. 8 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்திராதானம், பிரதான கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, 9 மணிக்கு சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயணசுவாமி விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 9.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயண சுவாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாலை 4.30 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் உடன் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சங்கரன்கோவில் நகரம் களைகட்டியுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று நடந்த யாகசாலை பூஜையில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்பி., ராணி, எம்எல்ஏ., ராஜா, அதிமுக., கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், அறங்காவலர் ராமகிருஷ்ணன், பி.எல்.ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.