கொட்டும் மழையிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
பந்தலூர்; பந்தலூரில் கொட்டும் மழையிலும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற குட்டீஸ்கள்.
பந்தலூரில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நடந்தது. பந்தலூர் ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ச்சகர் சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள், கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கு கிருஷ்ணர் நாமம் பாடி அங்கிருந்து செண்டை மேளத்துடன், வேடமணிந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், ஹட்டி சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட், பந்தலூர் பஜார் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்று பின்னர், தனியார் மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கொட்டும் மழையிலும் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள், மகிழ்ச்சியுடன் நடந்து சென்றது அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மதி, அருண், குட்டி, சதீஷ், யோகேஸ்வரன், கலைச்செல்வன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து இருந்தனர்.