ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: தூண்களுக்கு பதில் தென்னை மரம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வரும் டிசம்பர், 13ம் தேதி துவங்கவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபத்தில் குறைவாக உள்ள தூண்களுக்கு பதில், தென்னை மரங்கள் நட்டு பந்தல் அமைக்கும் பணி துவங்கியது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும், திரு அத்யயன உற்சவம் எனப்படும், வைகுண்ட ஏகாதசி திருவிழா, உலக பிரசித்திப் பெற்றது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும். நடப்பாண்டு வரும் டிசம்பர், 13ம் தேதி துவங்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஜனவரி, 3ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான, சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு, 24ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கு நடக்கிறது. தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளும் வேடுபறி வைபவம், 31ம் தேதியும், தீர்த்தவாரி, ஜனவரி, 2ம் தேதியும், நம்மாழ்வார் மோட்சம், 3ம் தேதியும் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிசம்பர், 14ம் தேதி முதல், தொடர்ந்து ஜனவரி, 2ம் தேதி வரை, மூலவருக்கு முத்தங்கி அலங்கார சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியன்று, திருமாமணி மண்டபத்தில் ரத்ன அங்கியுடன் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அன்று காலை, 4.45 மணி முதல், இரவு, 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். திருமாமணி மண்டபத்தில் தங்கக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருள்வதால், ஆயிரங்கால் மண்டபம் சொர்க்கமாக மாறுவதாக ஐதீகம். ஆனால், "பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்பதால், ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், 960 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்துக்கு வெளியே, புதிதாக வெட்டப்பட்ட, 40 தென்னை மரங்களும், புது தென்னங்கீற்றுகளை கொண்டும், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. "பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், விழா முடிந்த பிறகு, மரங்களும், கீற்றுகளும் அகற்றப்பட்டு விடுகின்றன. வரும் டிசம்பர், 13ம் தேதி துவங்கவுள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபம் முன், 40 தென்னை மரங்கள் நட்டு, பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கி தொடர்ந்து வருகிறது.