உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் புனித பயண திட்டம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு!

ஜெருசலேம் புனித பயண திட்டம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு!

சென்னை: அரசு சிறப்பு நிதியுதவியுடன் கூடிய, ஜெருசலேம் புனிதப் பயண திட்டத்தை. அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் செயல்படுத்த அரசு முடிவெடுத்து, விண்ணப்பங்களை கோரியுள்ளது. சிறுபான்மையினர் நல கமிஷனர் தங்க ஸ்வாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமிய மக்களின், ஹஜ் புனித பயணத்திற்கு, தமிழக அரசின் சார்பில் உதவிகள் செய்யப்படுகிறது. இதுபோல், கிறிஸ்தவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் இருந்து, இஸ்ரேலின் ஜெருசலேம் சென்று வருவதற்கு, ஒரு நபருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம், ஆண்டொன்றிற்கு, 500 கிறிஸ்தவர்களுக்கு, நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக, ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில், "ஜெருசலேம் புனித பயணக்குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. ஜெருசலேமை மையமாகக் கொண்டு, பெத்தலஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் உள்ளிட்ட இடங்களை இப்பயணம் உள்ளடக்கியது. இப்புனித பயணம், அடுத்த ஆண்டு, பிப்ரவரி முதல் மே வரை நடத்த, அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் துவங்கி, சென்னையில் முடியும் இந்த பயணத்திற்கான விண்ணப்பங்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து பெறலாம். இதற்கான விண்ணப்பத்தை, அடுத்த மாதம், 5ம் தேதி மாலை, 5:45க்குள், அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !