ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மழைநீர் புகுந்தது
ADDED :375 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை கனமழை கொட்டியது. ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன், 1 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியது. தேசிய நெடுஞ்சாலையிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் நான்கு ரத வீதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. கோவில் மேல் தளத்தில் இருந்து மழைநீர் சுவாமி மற்றும் அம்மன் சன்னிதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் குளம் போல தேங்கியது. இதனால், பக்தர்கள் வெள்ளத்தில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மழை நின்ற ஒரு மணி நேரத்துக்குப் பின், மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றப்பட்டது.