மண்டல மகர விளக்கு சீசனில் விற்க 40 லட்சம் அரவணை பாயாச கேன்கள் தயார் : தேவசம்போர்டு
கம்பம்; சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசனை ஒட்டி 40 லட்சம் கேன் அரவணை பாயாசம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சபரிமலை முதலிடம் பெறுகிறது . ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறந்து பக்தர்களுக்கு தரிசன வசதி செய்த போதும், ஆண்டு தோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் துவங்கி இரண்டு மாதங்கள் நடைபெறும் மண்டல மகர விளக்கு திருவிழாவே ஆண்டு திருவிழாவாகும். சபரிமலை வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது அரவணை பாயாசம் மற்றும் அப்பம் விற்பனை மூலம் கிடைக்கிறது. கடந்தாண்டு அரவணை பாயாசம் ௹, 146.99 கோடிக்கும் அப்பம் ௹. 17.77 கோடிக்கும் விற்பனையானது. இதற்கிடையே கடந்தாண்டு அரவணை பாயாசத்தில் பயன்படுத்தப்பட்ட ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பூச்சி கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அவரவணை பாயாசம் விற்பனைக்கு கோர்ட் தடை விதித்தது. பின்னர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தது. ஆய்வக பரிசோதனைக்கு பின் அரவணை பாயாசத்தை விற்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இருந்த போதும் தேவசம் போர்டு ரூ.5.5 கோடி மதிப்புள்ள 6.65 லட்சம் அரவணை பாயாசம் கேன்களை விற்கவில்லை. இதற்கிடையே வரும் நவ.16 ல் இந்தாண்டிற்குரிய சீசன் துவங்க உள்ளது. அக். 18 ல் அரவணை பாயாசம் உற்பத்தி துவங்கி தற்போது முதற்கட்டமாக 40 லட்சம் அரவணை பாயாசம் கேன்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. தினமும் 1.10 லட்சம் அப்பம் தேவைப்படும். எனவே தினமும் 1.25 லட்சம் அப்பம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.