திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா; குவிந்த பக்தர்கள்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழாவில் 4ம் நாளான இன்று உற்சவருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கந்த சஷ்டி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4ம் நாளை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நான்காம் நாளில் உற்சவர் சண்முகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.