உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை வேல் வாங்கும் விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை வேல் வாங்கும் விழா

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரலீலை நவ. 7ல் நடக்கிறது. அதன்முன் நிகழ்ச்சியாக நாளை மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், பவளக் கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு பூஜை முடிந்து திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்படும். அம்பாள் கரத்தில் இருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்படும். தீபாராதனைகள் முடிந்து பூ சப்பரத்தில் சுவாமி திருவாட்சி மண்டபத்தை ஆறு முறை வலம் சென்று அருள்பாளிப்பார். 


ஆண்டுக்கு ஒருமுறை: கோயிலில் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகம் கொண்ட சண்முகர் எழுந்தருளியுள்ளார். சண்முகருக்கு கந்த சஷ்டி திருவிழா, மற்ற நாட்களிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் சண்முகர், ஆண்டுக்கு ஒருமுறை கந்த சஷ்டி திருவிழா நாளாம் நாள் அன்று மயில் வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !