உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்; தைலக்காப்பு உற்சவம் துவக்கம்

கருட வாகனத்தில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்; தைலக்காப்பு உற்சவம் துவக்கம்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உச்சிகால கருட சேவையில் பெருமாள் உலா வந்த நிலையில், தைலக்காப்பு உற்சவம் துவங்கியது.மதுரை அழகர் கோவிலில் சுந்தரராஜ பெருமாளுக்கு நடத்தப்படும் தைலக்காபு உற்சவம், பரமக்குடியில் வழக்கம்போல் விமரிசையாக துவங்கியது. நேற்று இரவு சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உற்சவர் சுந்தரராஜன் சயன கோலத்தில் எழுந்தருளினார். இன்று பெருமாள் கொண்டையில் தைலம் சாற்றி சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. வைணவ ஆச்சாரியர்கள் முதன்மையானவரான ராமானுஜரை கள்ளழகர் குருவாக ஏற்றுக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவருக்கு அழகர் கோயிலில் தனிச் சன்னதி உள்ள நிலையில், ஐப்பசி மாதம் ராமானுஜர் முக்தி அடைந்தார். தொடர்ந்து குருவுக்கு செய்யும் மரியாதையாக அழகருக்கு தைலக்காப்பு உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி அழகர் கோவிலில் நூபுர கங்கையில் தொட்டி திருமஞ்சனம் எனப்படும் உற்சவம் நடக்கிறது. இதே போல் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. தொடர்ந்து நவ.15 அன்று கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !