சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சத்ய சாய்பாபாவிற்கு சிறப்பு ஆர்த்தி
சென்னை; பகவான் சத்ய சாய்பாபாவின் 99வது அவதார தினம், சுந்தரத்தில், சத்ய சாய் சேவா அமைப்பின் சார்பில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சத்ய சாய் சமதியின் சென்னை தலைமையகமான சுந்தரம், ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால், 42 ஆண்டுகளுக்கு முன் சுந்தரம் திறக்கப்பட்டது. இதன் சார்பில், ஆண்டுதோறும் பகவான் சத்ய சாய் பாபாவின் பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாபாவின், 99வது அவதார தினத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நாகர்சங்கீர்தனத்துடன் விழா துவங்கியது. பின், அனைத்து சந்நிதிகளிலும் கொடியேற்றம், மங்கள வாத்தியம், நித்ய பூஜை மற்றும் ஸ்ரீ சாய் சுந்தரேஸ்வரர் சந்நிதியில் சாய் காயத்ரி ஹோமம் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஷீரடி பாபாவிற்கு அபிஷேகம், பூஜை, இளைஞர் பிரிவின் வேதபாராயணம், பஜனைகள், அனைத்து மாவட்டங்கள் சார்பில் ஸ்ரீ சத்ய சாய் சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. நண்பகலில், நாராயண சேவா மற்றும் வஸ்திர தானம் நடந்தது. மாலை வேத மந்திரம் ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து சூரியநாராயணன் குழுவினரின் பக்தி இசை பாடப்பட்டது. பின், பகவானின் தெய்வீக சொற்பொழிவு நிகழ்ந்தது. பின், சுந்தரம் பஜன் குழுவினரின் பஜனைகளுடன் ஜூலா மஹோத்ஸவம், மஹா மங்கள ஆரத்தி, இரவு இளைஞர் பிரிவு வாயிலாக நடைபாதையில் வசிப்பவர்களுக்கு படுக்கை விரிப்புகள் விநியோகம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.