700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிலை; அம்மனாக வழிபட்டு வரும் பக்தர்கள்!
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மாங்குடி கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிற்பத்தை, அப்பகுதியினர் அம்மனாக நினைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.பரமக்குடி அருகே வழிமறிச்சான் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் பழமையான அம்மன் சிலை இருப்பதாக தொல்லியல் ஆர்வலர் சிவா பார்த்துள்ளார். தொடர்ந்து மதுரை லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை தலைவர் மீனாட்சிசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்து கள ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் கூறியதாவது: இந்த சிலை பிற்கால பாண்டியர்களின் 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் சிற்பம் ஆகும். சிவனின் 64 வடிவங்களில் பைரவரும் ஒன்று. இச்சிலை கிழக்கு நோக்கி நிர்வாண கோலத்தில் நான்கு கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் உடுக்கை, பின் இடது கரத்தில் பாச கயிறு மற்றும் சூலாயுதம் இருக்கும் முன் வலது கரம் சிதைந்துள்ளது. முன் இடது கரத்தில் கபாலம் மற்றும் தலையின் பின்புறம் தீச்சுடர் காணப்படுகிறது. உடம்பில் ஆபரணங்கள் தெளிவாக தெரியாத நிலையில், இந்த பைரவரை கிராமத்தினர் அம்மனாக வழிபட்டு வருகின்றனர், என்றார்.