உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார், சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார், சண்டிகேஸ்வரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே பொருளூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர், வளரியுடன் கூடிய அய்யனார் சிற்பங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.


பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் வீ.அரிஸ்டாட்டில், மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் மு.லட்சுமணமூர்த்தி மற்றும் வாகை கோபாலகிருஷ்ணன் அடங்கிய குழு ஒட்டன்சத்திரம் தாலுகா பொருளூர் பகுதியில் மேற்பரப்பாய்வு மேற்கொண்டனர். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியரின் கைவண்ணத்தில் உருவான அய்யனார் மற்றும் சண்டிகேஸ்வரர் சிற்பங்களை கண்டறிந்தனர்.


அவர்கள் கூறியதாவது: பழங்கால பயன்பாட்டு கருவிகளில் ஒன்றான வளரியை தனது வலது கையில் பிடித்தவாறு அய்யனார் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் மூன்றரை அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட பலவகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி அகன்ற ஜடா பாரத்துடனும், காதுகளில் வட்ட வடிவ பத்திர குண்டலமும், மார்பில் ஆபரணங்களும், தோல் புஜங்களில் வளைவுகளும், கைகள், கால்களில் அணிகலன்கள் அணிந்தபடியும், இடையில் இடைக்கச்சை அணிந்தபடி இடது காலினை மடக்கியும் வலது காலை தொங்கவிட்டும் உட்குதியாசன கோலத்தில் அமர்ந்தவாறு இச்சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இடது காலையும் இடையையும் இணைக்கும் விதமாக யோகப்பட்டை இடம் பெற்றுள்ளது. இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து 9 அல்லது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம் மேலும் இங்கு ஒரு சண்டிகேஸ்வரர் சிற்பமும், திருமால் சிற்பமும் காணப்படுகிறது .இவை அனைத்தும் ஒரே காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம். இவ்விடத்தில் பல்வேறு வகையான நடு கற்களும் காணப்படுகின்றன, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !