தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு சிறப்பு பூஜை
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆண்டு தோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஐம்பொன்னாலான நடராஜபெருமானுக்கு நேற்று (12ம் தேதி) மாலை விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, இன்று (13ம் தேதி) காலை சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிவகாமசுந்திரியுடன், நடராஜபொருமான் கோவிலில் வலம் வந்து நான்கு ராஜவீதிகளில் உலா வந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிறகு, மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என நெல்மணிகளை சுவாமி மீது துாவி வழிபாடு நடத்தப்பட்டது.