உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

திருமழிசை; திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள ‘பக்திஸாரர்’ எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, ‘தையில் மகம்’ திருஅவதார மகோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான தையில் மகம் திருஅவதார மகோற்சவம், கடந்த டிச. 25ம் தேதி, பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது. பின், கடந்த 6ம் தேதி, ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள், ஆழ்வாருக்கு தையில் மக திருஅவதார மகோற்சவ, விழாவில், காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலித்து வருகிறார். ‘தையில் மகம்’ திருஅவதார மகோற்சவம் விழாவை முன்னிட்டு, இன்று தேர்த் திருவிழா கோலாலமாக நடந்தது.இதில், பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரின் முன்புறம் பெண்கள், கோலாட்டம் ஆடியபடி சென்றனர். மேலும், தேரின் முன்புறம் பேரூராட்சி தலைவர் மகாதேவன் பங்களிப்பில் சிறப்புமிக்க கிராமிய நடனத்தை போற்றும் வகையில்  ஆந்திர பிரதேசம், திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நடனம் ஆடி புகழ் பெற்ற கிராமிய நடன கலைஞர்கள் நடத்தும் நடன நிகழ்ச்சியும், திருமழிசை பரத நாட்டிய குழுவினர் நடத்தும் சிறப்பான பரத நாட்டிய கலை நிகழ்ச்சியும் நடந்தது. காலை 9:00 கோவிலிலிருந்து துவங்கிய தேர்த் திருவிழா ரதவீதிகளில் வலம் வந்து, மதியம் 1:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !