மாசிமக தீர்த்தவாரி: கும்பகோணம் மகாமக குளத்தில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமகமும், ஆண்டுக்கு ஒருமுறை மாசிமகமும் வெகுவிமர்சையாக நடைபெறும்.
இந்தாண்டு, சைவ தலங்களான காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில்களில் கடந்த மார்ச் 3ம் தேதியும், வைணவ தலங்களில் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக சுவாமி ஆகிய மூன்று கோவில்களில், கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா மாசிமக விழா துவங்கியது. தொடர்ந்து, சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. இந்நிலையில் நேற்று காலை ஞானாம்பிகையம்மன் உடனாய காலஹஸ்தீவரர் தேரோட்டமும், மாலை சோமசுந்தரி அம்பிகை உடனாய சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவிலைச் சுற்றியும், காசி விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிஸ்வநாதர், அமிர்தவள்ளி அம்பாள் உடனாய அபிமுகேஸ்வரர் சுவாமி சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களின் சுவாமிகள் மகாமககுளத்தைச் சுற்றி தேரோட்டம் நடந்தது.
தொடர்ந்து, இன்று (மார்ச் 12ம் தேதி) காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோவில் சுவாமிகள் அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன், கோவிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர். பிறகு, குளத்தில் அஸ்ரத் தேவருக்கு பல்வேறு வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் மகாமக குளத்தில், புனித நீராடினர். மகாமக முதன்மை கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவில், ஆதிகம்பட்டவிஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருவதால், அந்த கோவில்களில் இந்தாண்டு மாசிமக பெரு விழா உற்சவம் கிடையாது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைணவ கோவில்கள்: இதே போல், சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று கோவில்களில் காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் தேரோட்டம் நடைபெற்றது. சாரங்கபாணி சுவாமி கோயில் பின்புறத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில், ஸ்ரீதேவி-பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.