திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்; அனைத்து பூஜைகளும் அத்திமர விக்கிரகங்களுக்கே நடைபெறும்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மூலவர்களுக்கு இன்று பாலாயம் நடந்தது. ஏப். 7 முதல் இன்று காலை வரை நான்கு கால யாகசாலை பூஜை நடந்தது.
யாகசாலை பூஜைக்காக கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு 5 யாக குண்டங்களும், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு 8 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது. தங்க குடத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் சக்தியும், மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சக்திகள் தனித்தனியாக வெள்ளி குடங்களிலும் கலை இறக்கம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களின் சக்திகள் வரைபடங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டு, 200 சொம்புகளில் புனித நீர் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜை நடந்தது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை முடிந்து, மூலவர்களின் சக்தி கலை இறக்கப்பட்ட புனித நீர் குடங்கள் சண்முகர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எழுந்தருளச் செய்யப்பட்டிருந்த அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட மூலவர்களின் விக்ரகங்களுக்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டு, புனித நீர் அபிஷேகம் முடிந்து, மூலவர் கரத்திலிருந்த தங்க வேலுக்கு புனித நீர் அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. ஏப். 7 முதல் திருப்பணிக்களுக்காக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கும்பாபிஷேகம் முடியும் (ஜூலை 14) வரை அனைத்து பூஜைகளும் மூலவர்களின் அத்திமர விக்கிரகங்களுக்கு நடைபெறும். நேற்று முதல் சண்முகர் சன்னதிவரை அத்திமர மூலவர்கள் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பாலாலய நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்பதேவன், ராமையா, பக்தர்கள் கலந்து கொண்டனர்.