உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆண்டாள்– ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆண்டாள்– ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் ஆண்டாள்– ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா ஏப்.3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும் இரவு வீதியுலாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளான நேற்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது. காலை 10:00 மணிக்கு கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருக்கல்யாண பட்டுப்புடவை, வேட்டி, திருமாங்கல்யம், மங்கலப் பொருட்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், வேதபிரான் பட்டர் தேங்காய் பெற்று, பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எழுந்தருளுலும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பட்டு மாலை மாற்றுதலும் நடந்தது. ஆடிப்பூர பந்தல் மணமேடையில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள ஸ்ரீவாரி பிரபு பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது திருப்பதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் சாற்றப்பட்டது. பின்னர் பெரியாழ்வார் முன்னிலையில் மாலை 6:21 மணிக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், அறங்காவலர்கள் மனோகரன், உமாராணி, நளாயினி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !