உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் இறைவனே வந்து பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வரலாற்று நிகழ்ச்சி; பக்தர்கள் பரவசம்

மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் இறைவனே வந்து பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வரலாற்று நிகழ்ச்சி; பக்தர்கள் பரவசம்

திருச்சி; மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் செட்டிப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வரலாற்று ஐதீகம் வைபவம் நடைபெற்றது. இதை தரிசிக்க குழந்தைப்பேறு, சுகப்பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் பெருந்திரளான பெண்கள், பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


பூம்புகார் பெருவணிகரான ரத்தினகுப்தன் மகள் ரத்தினாவதி திருச்சி மலைக்கோட்டை தெற்குவீதியில் இருந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டு, சிலமாதங்கள் கழித்து மட்டுவார்குழலம்மையின் ஆசீர்வாதத்தினால் ரத்தினாவதி கருவுற்றார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்க்க, அவரது தாயார் பூம்புகாரில் இருந்து திருச்சிக்கு வந்தபோது காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றைக்கடக்க தவித்திருந்தார்.  தாய் வருவார் என்று காத்திருந்த ரத்தினாவதி, செவ்வந்திநாதரை இடைவிடாது துதித்ததால் பிரார்த்தனையின் பலனாக இறைவனே தாயாக அவதரித்து, முறையாக பிரசவம்பார்த்து, ஆண் குழந்தையை கவனித்து வந்தார். காவிரி வெள்ளம் வடிந்து வீடுவந்த ரத்தினாவதியின் தாயார் நடந்ததைக் கேட்டறிந்ததோடு, இறைவன், இறைவியுடன் அனைவரிடத்திலும் காட்சியளித்தார். அன்றுமுதல் இத்தலத்தின் இறைவன் செவ்வந்திநாதர், தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார். அதன்படி தென் கைலாயம் என்று அழைக்கப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவின் 5ம் நாள் செட்டிப்பெண் மருத்துவ வைபவம் நடக்கிறது.  அதன்படி இன்று காலை கோவிலில், செட்டிப்பெண் மருத்துவ வைபவம் சிறப்பாக நடந்தது. செட்டிப்பெண் கருத்தரித்து இருத்தல், வெள்ளத்தால் தாயின் வரவு தடைபடுதல், பார்வதி, கங்கையுடன் ஈசன் தாயாக வருதல், மகப்பேறு பார்த்தல், ரத்தினாவதி, ரத்தினாவதியின் தாயாருக்கு இறைவன், இறைவி காட்சியளித்தல் போன்றவை தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டன. குழந்தைபேறு மற்றும் சுகப்பிரசவம் நடக்க வேண்டுபவர்கள், ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், வாழைத்தார் வழங்கியும் வழிப்பட்டனர். அறநிலையத்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !