மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்; பாண்டிய நாட்டு பேரழகனை வழிபட்டு பக்தர்கள் பரவசம்
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார்.
சித்திரைத்திருவிழாவின் ஒருபகுதியாக அழகர்கோவிலில் மே 10ல், கோயிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லாக்கில் கண்டாங்கி பட்டு உடுத்தி வேல் கம்புடன் கள்ளழகர் கோலத்தில் புறப்பட்டார். 11ம் தேதி அதிகாலை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இரவு சுவாமிக்கு நுாபுரகங்கை தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு நேற்று அதிகாலை ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். தங்கக்குதிரையில் அதிகாலை 5:35 மணிக்கு வந்த அழகரை வெள்ளி குதிரையில் வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர் காலை 6:02 மணிக்கு வைகையில் அழகர் எழுந்தருளினார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதைதொடர்ந்து வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் சுவாமி ஏகாந்த சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (13ம் தேதி ) காலை 9:00 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனுார் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். இதை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இரவு 11:00 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு சென்று அங்கு விடிய, விடிய தசாவதார அலங்காரங்கள் நடக்கின்றன. நாளை (14ம் தேதி) காலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்துடன் புறப்பட்டு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.