வாட் பூர்ணிமா; கணவனின் ஆயுள் அதிகரிக்க ஆல மரத்தில் கயிறு கட்டி பெண்கள் வழிபாடு
வட மாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும் வாட் சாவித்திரி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் தங்களின் மாங்கல்ய பாக்கியத்திற்காக ஆல மரத்தில் கயிறு கட்டி ஏராளமான திருமணமான பெண்கள் வழிபட்டனர்.
வட இந்திய பெண்கள் ஆண்டு தோறும் ‘வட் பூர்ணிமா’ திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். வட் பூர்ணிமா என்றால் ‘முழு நிலவு’ என்று பொருள். சாவித்திரி உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழவும் இறைவனை வழிபடுகின்றனர். திருவிழாவை முன்னிட்டு திருமணம் முடிந்த பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்க நேற்று உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தங்களை மணப்பெண்கள் போல அலங்கரித்து கொண்டு இறைவனை வேண்டி, ஆலமரத்தில் நூலை சுற்றினர். மேலும் ஒருவருக்கொருவர் குங்கும திலகமிட்டு வழிபட்டனர். இவ்வாறு ஆலமரத்தில் நூல் சுற்றினால் கணவன் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது ஐதீகம். விழாவானது மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.