ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் கருவறை விமான பாலாலயம்
திருப்பூர்; எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், கருவறை விமானங்களுக்கான பாலாலய விழா நடந்தது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையத்தில் உள்ள, ஆவுடைநாயகி சமேத சுக்ரீஸ்வர சுவாமி கோவில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பரம்பரை அறங்காவலர் மற்றும் பக்தர்கள் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு, கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் திருப்பணிகள் செய்து, கும்பாபிேஷகம் நடக்க முடிவு செய்யப்பட்டு, சிறிய திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், கருவறை விமான பாலாலயம் நேற்று நடந்தது. ஸ்ரீசுக்ரீஸ்வரர் மற்றும் ஆவுடைநாயகி அம்மன் கருவறை விமான கோபுரங்கள் பாலாலயம் செய்யப்பட்டன. காலை, 7:30 மணிக்கு துவங்கி, 9:00 மணி வரை, சிவாச்சாரியார்கள் வேத ஆகம மந்திரங்களை பாராயணம் செய்து, பூஜைகள் செய்தனர். முன்னதாக, சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பாலாலய பூஜையில், திரளான பக்தர்கள்பங்கேற்றனர்.