உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.. உற்ஸவரை தரிசித்தாலே புண்ணியம்..!

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.. உற்ஸவரை தரிசித்தாலே புண்ணியம்..!

கோயிலின் கருவறையில் உள்ள சுவாமி திருவிழாவின்போது உற்ஸவராக எழுந்தருள்வார். இதை உற்ஸவம் என்பபோம். இது முத்தொழிலைக் குறிக்கும். இதில் உத் – சிருஷ்ட்டி (படைத்தல்), ஸ – திதி (காத்தல்), வம் – சங்காரம் (ஆணவம் அழித்தல்) என்பதை குறிக்கும். வீதியில் உலா வரும் உற்ஸவரை தரிசித்தால் புண்ணியம் சேரும் என திருத்தொண்டர் புராணத்தில் சொல்கிறார் தெய்வச்சேக்கிழார். அவர் சொல்வதை பார்ப்போம். 


மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் 

அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்

கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் 

உண்மையாமெனில் உலகர்முன் வருகென வுரைப்பார்.


இப்பூமியில் பிறந்தவர்கள் செய்யும் இரண்டு விதமான சிவப்பணிகள் முக்கியம். அவை  

1. அடியார்களுக்கு திருவமுது (உணவு) கொடுத்தல், அரனாரின் திருவிழாக்களை கண்ணார தரிசித்தல் என்பதே ஆகும். பொதுவாக விழாக்களை கீழ்க்கண்ட வகையாக பிரிக்கலாம்.

* மாதந்தோறும் நடைபெறும் விழா – மாதோற்ஸவம்

* பெருந்திருவிழா – மஹோற்ஸவம் (பிரம்மோற்ஸவம்)

* அன்பர் விழா – பக்தோற்ஸவம்

இதில் 1,3,5 நாட்களில் நடைபெறும் திருவிழாவில் உற்ஸவருக்கு காப்பு காட்டப்படும். 

7,9,12 நாட்களில் நடைபெறும் திருவிழாவானது கொடியேற்றம், சுவாமி வீதியுலா, தேர்த்திருவிழா, பூம்பல்லக்கு என நடைபெறும். அந்த வகையில் திருப்பரங்குன்றத்தில் என்னென்ன திருவிழா நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா...


வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி ஊஞ்சல் உற்ஸவம், ஐப்பசி கந்த சஷ்டி என முருகனுக்கு திருவிழா நடக்கும். ஆனி மாணிக்கவாசகர் உற்ஸவம், மார்கழி திருவாதிரை சிவனுக்கு நடக்கும். கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் நடக்கும் திருவிழாவில் சிவனும், முருகனும் சேர்ந்து அருள்பாலிப்பர். அம்பிகைக்கு புரட்டாசி நவராத்திரி, மாசி எண்ணெய் காப்பு உற்ஸவம் நடக்கும். பெருமாளுக்கு மார்கழி வைகுண்ட ஏகாதசியில் சிறப்பு வழிபாடு நடக்கும். மேலும் மாதவாரியாக நடைபெறும் திருவிழாவை பார்ப்போம்.  


சித்திரை திருவிழா

தன் அப்பா, அம்மாவான மதுரை சொக்கநாதர், மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்திற்கு செல்கிறார் முருகன். இவர் புரோகிதராக செல்வதால் ‘புரோகிதக்கந்தன்’ என அழைக்கப்படுகிறார் என்கிறது திருவிளையாடல் புராணம்.

 

வைகாசி வசந்தோற்ஸவம்

இத்திருவிழாவை மூன்றாக பிரிக்கலாம். 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார் முருகன். 10ம் நாள் விசாகத்தன்று பாலாபிேஷகம் நடைபெறும்.  

11ம் நாள் செவ்வேள் பரமன் மொட்டையரசுக்கு எழுந்தருள்வார்.

 

ஆனி ஊஞ்சல் உற்ஸவம் 

குறிப்பிட்ட பத்து நாட்களில் தெய்வானை, சுப்பிரமணியருக்கு அபிேஷகம், ஆராதனை நடக்கும். மாலையில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வர். அப்போது வேதபாராயணம், திருமுறைகள் இசைத்து தீபாராதனை நடைபெறும். 


ஆடிக்கார்த்திகை 

இந்நாளில் சொக்கநாதர் கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் தெய்வானை, சுப்பிரமணியர் எழுந்தருள்வர். அப்போது சுவாமிக்கு அபிேஷகம், ஆராதனை நடைபெறும். அன்று அன்னதானமும் நடக்கும். 


ஆவணி மூலத்திருநாள்

மதுரை சொக்கநாதர் கோயிலில் ஆவணி மூலத்திருநாள் நடைபெறும். அப்போது அங்கு பாண்டிய மன்னராக எழுந்தருள்கிறார் முருகன். அத்திருவிழாவில் மாணிக்கவாசகருக்காக நரியை பரியாக்கியது, புட்டுக்கு மண் சுமந்தது ஆகிய திருவிளையாடல்களை செய்துவிட்டு ஆறாம் நாளன்று அங்கிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் வருவார்.  

 

புரட்டாசி நவராத்திரி

இத்திருவிழா நாயக்கர் காலத்தில் இருந்து விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும் இத்தலத்து அம்பிகையான ஆவுடைநாயகி, திருவாச்சி மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் காட்சி தருவாள். பத்தாம் நாளன்று பசுமலையில் நடைபெறும் அம்பு போட்டும் வைபவத்தில் முருகன் எழுந்தருள்கிறார்.   


ஐப்பசி கந்தசஷ்டி 

கந்தசஷ்டி திருவிழாவில் சூரபத்மனை வதம் செய்வார் முருகன். அப்போது ஆறு நாட்களிலும் வெவ்வேறு கோலத்தில் அருள்பாலிப்பார் முருகன். 

1 ம் நாள் நின்ற கோலம்

2 ம் நாள் அமர்ந்த கோலம்

3 ம் நாள் மயில் மீது அமர்ந்த கோலம்

4 ம் நாள் அம்பிகையை நோக்கி தவம் செய்யும் கோலம்

5 ம் நாள் சிவபூஜை 

6 ம் நாள் இரவு சூரசம்காரம்

7 ம் நாள் பாவாடை தரிசனம் (முருகன் சன்னதி முன்பு வெள்ளை நிற துணியை பரப்பி, அதில் தயிர்சாதம் நைவேத்யம் செய்வர்)

இங்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஐப்பசி, தை, பங்குனி என மூன்று மாதத்திலும் சூரசம்காரம் நடைபெறும். 



திருக்கார்த்திகை உற்ஸவம்

6 ம் நாள் சைவ சமய ஸ்தாபித லீலை

7 ம் நாள் கங்காளநாதராக வலம் வருவார்

8 ம் நாள் ஊடல் உற்ஸவம், முருகனுக்கு பட்டாபிேஷகம்

9 ம் நாள் சிறிய வைரத்தேர் விழா

10 ம் நாள் சொக்கப்பனை


மார்கழி திருப்பள்ளியெழுச்சி

மாணிக்கவாசகருக்கு காப்பு காட்டி விழா தொடங்கும். ஒன்பதாம் நாள் சட்டத்தேரில் மாணிக்கவாசக சுவாமி மலையை வீதி வலம் வருவார். 

பத்தாம் நாளன்று சிவகாமி அம்பிகை, நடராஜர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், தேவார மூவருக்கும் தாண்டவ தீபாராதனை நடைபெறும். இப்படியாக ஆருத்ரா தரிசன வைபவம் நிறைவுபெறும். 

பவளக்கனிவாய் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி வைபவம் சிறப்பாக நடக்கும். 


தை தெப்பம் 

தைப்பூசத் திருவிழாவிற்கு பதிலாக தைக்கார்த்திகையில் தெப்போற்ஸவம் நடைபெறும். ஒன்பது நாட்களுக்கு முன்பாகவே கொடியேற்றப்பட்டு சுவாமி, அம்பிகை, தெய்வானை, சுப்பிரமணியர் ஆகியோர் வீதியுலா வருவர். 


மாசி எண்ணெய்காப்பு உற்ஸவம்

இவ்விழாவில் தெய்வானைக்கு எண்ணெய்க் காப்பு உற்ஸவம் நடைபெறும். அப்போது தெய்வானையை துயில் எழுப்பி, பல் துலக்கி, எண்ணெய் தேய்த்து சிக்கு எடுத்து கண்ணாடி பார்ப்பது போல பாவனை செய்வர். 

இம்மாதத்தில் வரும் மகாசிவராத்திரி அன்று சிவன், அம்பிகை, தெய்வானை, முருகன் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு அபிேஷக ஆராதனை நடக்கும்.  


பங்குனி பிரமோற்ஸவம் 

இங்கு நடக்கும் பெரிய திருவிழா இதுதான். அன்று காலையிலும் மாலையிலும் சுவாமி வீதியுலா நடைபெறும். ஒவ்வொரு நாளும் சைவ ஐதீக நிகழ்ச்சிகள் நடக்கும்.  

5 ம் நாள் நக்கீரர் யாகம் 

6 ம் நாள் சைவ சமயம் ஸ்தாபித்த லீலை 

10 ம் நாள் சூரசம்காரம் 

11 ம் பட்டாபிேஷகம்

12 ம் திருக்கல்யாணம்

13 பெரிய தேர்த்திருவிழா 

திருப்பரங்குன்ற மலையை வீதி வலம் வருதல்

14 தீர்த்தவாரி வைபவம் 


காப்பு கட்டி, கொடியேற்றி தொன்று தொட்டு நடைபெறும் இத்திருவிழாவில்  கட்டளைதாரர்கள் தனிநபர்களாகவும், பல சமுதாயத்தை சார்ந்தவர்களும் நடத்தி வருகிறார்கள்.  


செங்கோலுடன் செவ்வேள்

தர்மத்தின் வடிவமான ஸ்ரீராமனே ஹிந்து மக்களின் நாயகன். அவரே இவ்வுலகில் சிறந்த உதாரண புருஷர். ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்காக தனது மகனையே தேர்க்காலில் இட்டு நீதியை நிலைநாட்டிய மன்னன் மனுநீதிச்சோழன் நமக்கு முன்னோடி. அறம், பொருள், இன்பத்தை பெற வாழ்வியலோடு வாழ்ந்து காட்டியவர்கள் இத்தேசத்து மக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறத்துடன் கூடிய நல்லாட்சி நடத்திய மன்னர்களைக் கொண்டது இத்தமிழகம். இவர்களின் நல்லாட்சிக்கு நடுநிலை பிறழாத வாழ்விற்கு அணிகலனாக திகழ்வது செங்கோல். குடிமக்களைக் காக்க, ஒருகரத்தில் வாளும் மறுகரத்தில் செங்கோலும் ஏந்தி இருந்தனர் நாட்டு மன்னர்கள். மறத்தின் (வீரம்) சின்னமான வாளும், அறத்தின் (தர்மம்) சின்னமான செங்கோலும் மன்னரின் அடையாளங்கள். இதனை தெய்வத்திடம் இருந்தே வழி வழியாக பெற்றார்கள். செங்கோல் நீதியின் அடையாளம். தர்மத்தின் வடிவமான செங்கோலின் சிறப்பினை யாவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வண்ட சாரசரத்தை ஆளும் தெய்வத்திற்கு செங்கோலை அணிவித்து அழகு பார்த்தார்கள் நம் முன்னோர்கள். 


அந்த வைபவம் இன்றும் முது பெரும்நகரான நம் மதுரையில் நடக்கிறது. இங்கு கோயில் கொண்டுள்ள மீனாட்சி சொக்கநாதரும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியப்பெருமானுக்கு இவ்விழா நடக்கிறது. 


* சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் கொடுக்கிறார் ஆலவாய் அண்ணலான சொக்கநாதப் பெருமான். ஆவணி மூலத்திருவிழாவில் சிவபெருமானுக்கு செங்கோல் கொடுக்கிறார் தேவலோகத்தலைவனான இந்திரன். இப்படி செங்கோல் கொடுத்து பட்டாபிேஷகம் செய்யும் வைபவம் காலங்காலமாக நடைபெறுகிறது. அதைப்போலவே திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிேஷகம் செய்கின்றனர். கார்த்திகை மாதத்தில் சிவபெருமானும், பங்குனி மாதத்தில் தேவலோகத் தலைவனான இந்திரனும் பட்டாபிேஷகம் செய்து வைக்கின்றனர். இந்நிகழ்வில் முருகனுக்கு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். பிறகு அவரது தலையின் மீது கிரீடம் சாற்றி மங்கல வாத்தியங்கள் முழங்கும். சேவல், மயில் முத்திரை சின்னங்களுடன் நிர்வாகத்திற்குரிய கருவூல சாவியும், பேனாவையும் முருகனிடம்  இருந்து பெற்றுக் கொள்வார்கள். பின்னர் அவருக்கு பரிவட்ட மாலை மரியாதையெல்லாம் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும். இதில் சுவாமி தரிசனம் செய்பவர்கள் நோக்கம் தர்மநெறியுடன் வாழ வேண்டும் என்பதே ஆகும். 


மாமனும் மருமகனும் 

அழகர்கோவில் கள்ளழகருக்கும், திருப்பரங்குன்ற முருகனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அவை,  

* மதுரை கள்ளழகருக்கு சித்ரா பவுர்ணமி விசேஷம். 

* சுப்பிரமணியருக்கு வைகாசி பவுர்ணமி சிறப்பு. 

* தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்படுவார் அழகர். 

* கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்படுவார் சுப்பிரமணியர். 

* அழகர் வைகை ஆற்றினை அடைவதற்குள் பல மண்டபங்களில் எழுந்தருள்வார்.  

* கோயிலில் இருந்து புறப்பட்ட முருகன் மொட்டையரசு என்ற இடத்தை அடைவதற்குள், பல மண்டபங்களில் எழுந்தருள்வார். 

* வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன் தங்கக்குதிரையில் அழகர் காட்சி தருவார். 

* மொட்டை அரசிற்கு எழுந்தருள்வதற்காக தங்கக்குதிரையில் வருவார் முருகன். 

* அழகர்மலைக்கு திரும்பும் போது பூப்பல்லக்கில் புறப்படுவார் அழகர். 

* கோயிலுக்கு திரும்பும் போது பூப்பல்லக்கில் புறப்படுவார் முருகன். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !