அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் நடந்த தீமிதி திருவிழா; பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர நிறைவையொட்டி, உண்ணாமுலையம்மன் சன்னதி முன் நள்ளிரவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த, 19ம் தேதி, அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் விநாயகர் பராசக்தி அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலை ஆடிப்பூர தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உண்ணாமுலையம்மன் சன்னதி முன் நள்ளிரவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்திலேயே கோவில் பிரகாரத்தில், தீமிதி விழா நடப்பது இங்கு மட்டுமே என்பது குறிபிடத்தக்கது.