தேவகோட்டை; தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த 21 ந்தேதி கோயிலில் மேடை போடுதலுடன் தொடங்கியது. மறுநாள் ஆடி முதல் செவ்வாய்க்கிழமை முதல் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொங்கல் வைத்து பூஜைகள் நடந்தன. அன்றிலிருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு அம்மன் முன் பீடத்திற்கு தினமும் காலை மாலை இரு நேரங்களிலும் அபிஷேகம் பூஜைகள் நடந்தன. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து வழிபட்டனர். இரண்டாம் செவ்வாய்க்கிழமையான நேற்று பீட அபிஷேகத்தை தொடர்ந்து மதியம் கோயிலில் கோயில் சார்பாக இரண்டாவது பொங்கல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து புள்ளிப் பொங்கலாக ஆயிரக்கணக்கான பெண்கள் கோயிலைச் சுற்றி பொங்கல் வைத்து வழிப்பட்டனர். மதியம் முதல் இரவு வரை பொங்கல் வைத்தல் தொடர்ந்தது. ஏராளமானோர் பொங்கலுடன் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். கரும்பு தொட்டிலில் குழந்தைகள் வைத்து கோயிலை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.