தந்தைக்கு சமமான குரு!
ADDED :4716 days ago
விஸ்வாமித்திரர், சீதையின் தந்தை ஜனகரிடம் ராமனை அறிமுகப்படுத்தினார். ராமனின் முன்னோர்களான சூரியன், மநு, ப்ருது, இக்ஷ்வாகு, ககுஸ்தன், மாந்தாதா, பகீரதன், ரகு என்று எல்லாருடைய வீர தீரப் பிரதாபங்களை அடுக்கிக் கொண்டே வந்தார். தசரதர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக ராமன் பிறந்ததைக் கூறினார்.எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கடைசியாக இந்த ராமன் தசரதருக்குப் பெயரளவில் மட்டுமே புத்திரன் என்றார். ராமனை வளர்த்த பெருமை, அவர்களது குலகுரு வசிஷ்டரையே சாரும் என்று புகழ்ந்தார். ப்ரச்நோபநிஷத் என்னும் உபநிஷதத்தில் சீடர்கள், த்வம் ஹி ந: பிதா என்று சொல்லி குருவை வணங்கினர். இதற்கு நீங்கள் அன்றோ எங்களின் தந்தை என்று பொருள். இந்த ஸ்லோகத்தின் அடிப்படையில் குருவும் தந்தை ஸ்தானத்துக்கு சமமானவர் என்பது புலப்படுகிறது.