உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயிலில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.


மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் நடக்கும் அனைத்து விதமான வைபவங்களும், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது. இதன்படி ஆக. 1 அன்று காலை கொடிமரத்தில் கருடாழ்வார் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு பெருமாள் வைகை ஆற்றில் இருந்து குதிரை வாகனத்தில் அழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி கோயிலை அடைந்தார். இன்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தயாருடன் பெருமாள் எழுந்தருளி திருத்தேரில் அமர்ந்தார். அப்போது தீப ஆராதனைகள் முடிந்து, கருப்பண்ணசாமி சன்னதியில் விசேஷ தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட தேரினை இழுத்து சென்றனர். ரதவீதிகளில் ஆடி அசைந்து சென்ற தேர் மதியம் 2:00 மணிக்கு நிலையை அடைந்தது. தேரில் வலம் வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். மேலும் கோயிலில் பக்தர்கள் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை காலை தீர்த்த வாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !