சிதம்பரம் பூவாலை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
கடலூர்; சிதம்பரம் அருகே பூவாலை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பூவாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தீப்பாய்ந்தால் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் அக்னி கரகத்துடன் ஊரில் முக்கிய வீதிகள் வழியே மேள தாளங்களுடன் வலம் வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.