1,400 ஆண்டு பழமையான சிவலிங்கம்; உத்திரமேரூர் சுடுகாட்டில் கண்டுபிடிப்பு
உத்திரமேரூர்; உத்திரமேரூர் கருங்குட்டை சுடுகாட்டில், 1,400 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் சிலை நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் கருங்குட்டை சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் பல ஆண்டுகளாக இருந்துவரும் சிவலிங்கம் சிலை, அப்பகுதி மக்களிடையே கவனம் பெறாமல் இருந்தது. இந்நிலையில், இதை கண்ட ஒருவர், உத்திரமேரூர் சுடுகாட்டில் பழமையான சிவலிங்கம் சிலை இருப்பதாக, வீடியோ பதிவிட்டிருந்தார். இதையடுத்து, தகவலறிந்த சிவனடியார்கள் அங்கு வந்து சிலையை ஆராய்ந்தனர். இது 1,400 ஆண்டுகள் பழமையான சிலை என, தெரிவித்தனர். இந்த சிலை 8 அடி உயரம் உடையது. அதை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட மண்டப துாண்கள் மண்ணில் பாதியளவு புதைந்துவாறு உள்ளன. அதை தொடர்ந்து, சிவனடியார்கள் சிவலிங்க சிலையை துாய்மைப்படுத்தி பூஜை செய்து வழிபட்டனர். இது குறித்து காஞ்சி சிவபாலன் சிவனடியார் கூறியதாவது: உத்திரமேரூர் கருங்குட்டை சுடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் சிலை பல்லவர் காலத்து சிலை வடிவமைப்பு முறையில் உள்ளது. கருங்குட்டை சுடுகாட்டில் சிவன் கோவில் இருந்ததற்கு ஆதாரமாக, அதன் அருகிலேயே மண்டப தூண்கள் மண்ணில் புதைந்து உள்ளன.இந்த சிவலிங்க சிலையை சுடுகாட்டில் இருந்து மீட்டு, வேறொரு இடத்தில் வைத்து மக்கள் வழிபாடு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.